அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக 2009 இல் உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , உலகெங்குமுள்ள, பெரும்பாலும் இணையத்தால் இணைந்த நண்பர்கள் ஒன்று கூடியபோது பொதுவான ஆர்வம் ஜெயமோகனின் எழுத்துக்களாக இருக்கக் கண்டோம்.

முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.

கவனம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கவுரவிக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் விருது வழங்கும் திட்டம் உருவானது.

இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கியவிருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள்.

K.V. அரங்கசாமி பொறுப்பேற்று நடத்துகிறார்.


விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – ஜெ விளக்கம்

அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பு நீங்கள் நடத்துவதா? அதனுடன் உங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? உங்கள் இணையதளத்தில் அதற்கு அளிக்கப் பட்டுள்ள இடம் காரணமாக இந்த வினாவைக் கேட்கிறேன்
சிவம்

அன்புள்ள சிவம்,
சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப் பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக்கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது.

ஆகவே அந்த நிதியைக் கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் வளர்ந்து இன்னும் கொஞ்சம் நிதி சேர்த்து ஓர் அமைப்பாக உருவாக்கினார்கள். அதுவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது.

சென்ற காலங்களில் பொதுவாக கவனிக்கப் படாத பல படைப்பாளிகளுக்கு நானே விழாக்கள் எடுத்திருக்கிறேன், என் செலவில். நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள்,நீல.பத்மநாபன், வேத சகாயகுமார் ஆகியோருக்கு எடுத்த விழாக்களைப் பற்றி இந்த இணையதளத்தில் எழுதியிருக்கிறேன். நான் மதிக்கிற, நான் ஆசிரியர்களாக எண்ணுகிற, பெரும் படைப்பாளிகள் மற்றும் அறிஞர்களை கௌரவிக்க பிறர் கையை எதிர்பார்ப்பதைவிட நாமே செய்து விடலாமென்பதே என் எண்ணமாக இருந்தது. இப்போது நண்பர்கள் அதற்கான ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

கலாப்ரியாவுக்கு இவ்வருடம் அறுபதாண்டு. தமிழ்க் கவிதையில் எளிமையான மத்திய வர்க்க வாழ்க்கைச் சித்திரங்களைக் கொண்டு வந்ததன் மூலம் ஒரு புதிய அலையை உருவாக்கிய முன்னோடிக் கவிஞர் அவர். அவரை கௌரவிக்கும் நிகழ்ச்சி இது. மேலும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டம் உள்ளது. எதிர்காலத்தில் இந்த அமைப்பு சார்ந்து இலக்கிய விருதுகளையும் அளிக்கலாமென எண்ணுகிறார்கள்.
ஜெ

https://www.jeyamohan.in/7255/

1 Comment

 1. J. Daniel
  November 25, 2010

  நிறை குடங்களின் முயற்சி போற்ற வேண்டிய ஒன்று. கந்தல் மனசுள்ளவன் கூட வெள்ளி இழை சொறுகிய பள பளக்கும் நோட்டை கடைக்காரன் முகத்துக்கு நேராக நீட்டுகிறான். சமூக நாடியின் ரத்தத்தை அடிக்கடி சுத்திகரித்து, தான் பசியாலும் பட்டினியாலும் குடல் சுறுங்கிக்கிடக்கும் எத்தனையோ படைப்பாளிகள்.
  அவர்களை இனம் கானுகிற பணியை செய்ய இனிய இல்லங்களை அலங்கரிக்கும் வாழ்வின் இலக்கணங்களை படைப்பவர்களால் மட்டும் தான் முடியும்.
  கரம் கொடுப்போம்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top