அறிமுகம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பு.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2009 ஆகஸ்டில்  உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கோவையை மையமாக்கி செயல்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் வட்டத்தின் அமெரிக்க கிளை ‘ஆஸ்டின்’ சௌந்தரராஜன் ஒருங்கிணைப்பில் 2020ல் தொடங்கப்பட்டது.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு இலக்கியக் கூடுகைகள், கருத்தரங்குகளையும் வாசகர் கலந்துரையாடல்-சந்திப்புகளையும்  நடத்துகிறது.

2010 முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகள்’ அளிக்கப்படுகின்றன. பொதுவாக கௌரவிக்கபப்டாத மூத்த தமிழ் படைப்பாளிகளை கௌரவிப்பதே நோக்கம். முதல் விருது மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது.

மறைந்த கவிஞர் குமரகுருபரனின் நினைவாக அவர் துணைவி கவிதா சொர்ணவல்லி அவர்களுடன் இணைந்து 2017 முதல் ‘குமரகுருபரன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. தமிழில் எழுதும் இளங்கவிஞர்களையும் அவர்களது படைப்புக்களையும் முன்னிலைப்படுத்துவதே இவ்விருதின் நோக்கம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் கூடுகைகளில் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் சீரிய படைப்பாளிகளும் கலை-இலக்கிய விமர்சகர்களும் பங்குபெற்று தமிழ்ச் சூழலுடன் உரையாடி வருகிறார்கள்.

தரமான இடைவிடாத செயல்பாடுகள் மூலம் இலக்கிய வாசிப்பை மேம்படுத்தவும், தமிழ் இலக்கியச் சூழலில் செறிவான உரையாடலும் கருத்துப் பரவலும் நடைபெறவும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் செயல்படுகிறது.