கவிஞர் புவியரசுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யவேண்டும் என்று அரங்கசாமிதான் சொன்னார். அரங்கசாமி உள்ளிட்ட கோவை நண்பர்களுக்கு புவியரசிடம் பிடித்தது அவருடைய குன்றாத உற்சாகம், எப்போதுமிருக்கும் நன்னம்பிக்கை. அது அவரை இளைஞர்களுக்கு நடுவே இயல்பாக அமரச்செய்கிறது.
தொண்ணூறாண்டுகள் என்பது இயல்பான ஒன்று அல்ல. ஏறத்தாழ எழுபதாண்டுகள் தமிழ் அறிவியக்கத்துடன் இருந்திருக்கிறார். விவாதித்திருக்கிறார், சீண்டியிருக்கிறார், தொடர் மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அவரை கௌரவிப்பதென்பது நம் அறிவியக்கத்தை ஒட்டுமொத்தமாக நாமே தொகுத்துக்கொள்வதுதான். நம் தொடர்ச்சியை நிறுவிக்கொள்வதுதான்.
விழாவை சீக்கிரமாகவே ஒருங்கிணைத்தோம். கொரோனா கட்டுப்பாடுகள் பெரிய சிக்கல். கூடங்கள் முழுமையான முன்பணம் கோருகின்றன, ரத்துசெய்தால் பணம் திரும்ப வராது. ஆகவே மிகப்பெரிய கூடங்களை ஏற்பாடு செய்ய முடியாது. நூறுபேருக்குமேல் கலந்துகொள்ளக்கூடாது. ஆனால் இருநூறுபேர் அமரும் கூடம் தேவை. ஆகவே இணையத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்தோம்.
நான் இருபத்து நான்காம்தேதி காலைதான் கோவைக்கு சென்னையில் இருந்து வந்தேன். ரயில்நிலையத்துக்கே அரங்கசாமி, யோகேஸ்வரன், ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் தங்க ஒரு வாடகை இல்லம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
கோவையில் முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டே இருப்பேன். கொரோனா காலத்திலேயே கூட வேதசகாயகுமார் அஞ்சலி, புதுவாசகர் சந்திப்பு, புத்தாண்டு, குருபூர்ணிமா, கவிதை உரையாடல் என நிகழ்வுகளுக்கு வந்துகொண்டேதான் இருந்தேன். இதைத்தவிர சொல்முகம் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இலக்கியத்தை மெய்யாகவே விரும்பும் எவருக்கும் இத்தகைய தனிப்பட்ட சந்திப்புகள், உரையாடல்கள் முக்கியமானவை. இதை தொடர்ந்து எழுதிவருகிறேன். இங்கல்ல உலகம் முழுக்கவே இத்தகைய ‘இலக்கிய அரட்டைகள்’ மிகப்பெரிய இலக்கியப் பங்களிப்பாற்றுகின்றன. இலக்கியமென்னும் இயக்கத்துக்குள் இல்லாதவர்கள், அரசியலோ வம்போ மட்டுமாக இலக்கியத்தை அணுகுபவர்களுக்கு இந்த முக்கியத்துவம் புரியாது.
இவை ‘சூடான’ சர்ச்சைகள் அல்ல இவை. சூடான சர்ச்சைகள் பெரும்பாலும் ஆணவச்சீண்டலாகி, பூசலாகி ஒவ்வாமையை உருவாக்குகின்றன. அந்த ஒவ்வாமையாலேயே மேற்கொண்டு சந்திப்புகள் நிகழ்வது குறையும். எந்த மெய்யான கருத்தும் முன்வைக்கப்படாமலாகும். வேடிக்கை, சிரிப்பு ஆகியவை கொண்ட அரட்டை இயல்பாக ஏதாவது ஒரு கருத்தை தொட்டு அப்படியே தீவிர விவாதமாக ஆகி பல கேள்விகளைத் தொட்டுச்சென்று மீண்டும் அரட்டையாகவேண்டும்.
தனிப்பட்ட முறையில் எவரும் சீண்டப்படலாகாது. சந்திப்பின் முடிவில் அனைவரும் இனிய பொழுதென உணரவேண்டும். அங்கே ஒரு கல்வி நிகழ்ந்திருக்கும், ஆனால் அது நிகழ்ந்ததே தெரியாது. பின்னால் சிந்தனை செய்தால்தான் எத்தனைபேர் எவ்வளவு விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள் என்று புரியும். அத்தகைய சந்திப்புகளே நீடிக்கும்.
அச்சந்திப்புகளின் அடிப்படைகளில் ஒன்று என்பது நிகர்த்தன்மை. அங்கே மேல்கீழ் என்னும் நிலை இருக்கலாகாது. அங்கே வாசகனும் எழுத்தாளனும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். மாறி மாறி கேலிசெய்து கொள்ளும் தன்மையில் உரையாடுகிறார்கள். எங்கள் சந்திப்புகளின் இவ்வியல்புகளால்தான் முப்பதாண்டுகளாக இச்சந்திப்புகள் நட்புடன் நீடிக்கின்றன.
நான் 1991 வாக்கில் தர்மபுரியில் இருக்கையில் என் இல்லத்தில் கூடிய சந்திப்புகளைப் பற்றி எம்.கோபாலகிருஷ்ணனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டோம். அவர்களில் ஒருவராக அன்று இருந்த ஈரோடு ரிஷ்யசிருங்கர் மறைந்த விஷயத்தை எம்.கோபாலகிருஷ்ணன் சொன்னார். அன்று வந்தவர்களில் செங்கதிர் இன்று காவல் உயரதிகாரி. பலர் இன்று அறியப்படும் எழுத்தாளர்கள்.
நாங்கள் பின்னர் சேர்ந்து சொல்புதிது சிற்றிதழை ஆரம்பித்தோம். தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே சேர்ந்து சிற்றிதழை ஆரம்பித்தவர்கள் சண்டைபோடாமல் நட்புடன் நீடிப்பது நாங்கள்தான் என எம்.கோபாலகிருஷ்ணனும் நானும் சொல்லிக்கொள்வதுண்டு. அடுத்து ஊட்டியில் குருநித்யா சந்திப்புகளாக இன்னொரு பத்தாண்டுகள். பின்னர் விஷ்ணுபுரம் அமைப்பு என சென்ற பதிநான்காண்டுகள்.
ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த நட்புக்கூட்டத்தில் இருந்துதான் தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்று எந்த இதழை எடுத்தாலும் நம் நண்பர்களே பாதிக்குமேல் புனைவும் விமர்சனமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நீடித்த உரையாடல். அதை நிகழ்த்துவது நட்பு அளிக்கும் இனிமை.
மாலை ஆறுமணிக்கு நிகழ்ச்சி. ஐந்தரை மணிக்கே நண்பர்களுடன் அரங்குக்குச் சென்றுவிட்டேன். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். குளிரூட்டப்பட்ட அழகான அரங்கு அது. புவியரசை நண்பர் கதிர்முருகன் அழைத்துவந்தார். வெள்ளை ஆடையில் அழகாக இருந்தார். நாஞ்சில் நாடன் வந்தார். எம்.கோபாலகிருஷ்ணன் வந்தார். ஒவ்வொரு நண்பராக வர வர இத்தகைய சந்திப்புகளுக்கே உரிய குதூகலம் நிறையத் தொடங்கியது
உரையாடல் மீண்டும் மீண்டும் முன்பு நடத்திய சந்திப்புகளைச் சுற்றியே சென்றுகொண்டிருந்தது. இனிய பழைய நினைவுகள். நாஞ்சில்நாடன் சொன்ன பல நிகழ்வுகள் முப்பதாண்டுகளுக்கு முந்தையவை.
விழாவுக்கு முன் விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் புவியரசு பற்றி ஆனந்த்குமார் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டமாக இருபது நிமிடக் காணொளி ஒளிபரப்பப் பட்டது. குறைந்த நாட்களுக்குள் எடுக்கப்பட்ட ஓரு நீண்ட உரையாடல் அது. முழுமையான வடிவம் யுடியூபில் பின்னர் வெளியாகும்.
புவியரசைப் பற்றி ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மயன் ஓர் ஆவணப்படம் எடுத்திருந்தார். கோவையின் அனைத்து எழுத்தாளர்களையும் அவர் ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை ஆவணப்படம் எடுத்திருக்கிறார். பிற ஆவணப்படங்களுடன் ஓர் யூடியூப் சானலே நடத்துகிறார்.
தமிழகத்தில் ஒரு நகரில் இப்படி அத்தனை எழுத்தாளர்களுக்கும் ஓர் ஆவணப்படம் எடுப்பது கோவையில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. எந்த லாபநோக்கமும் இல்லாமல் இலக்கிய ஆர்வத்தாலேயே மயன் இதைச் செய்கிறார். இலக்கியவாசகர், ஆன்மிகத்தேடல் கொண்டவர், பண்பாட்டு ஆய்வாளர் என பலமுகம் கொண்ட ஆளுமை அவர். [மயன் யூடியூப் சானல்]
கோவையின் மூத்தபெருமக்களும் புவியரசின் குடும்பமும் நண்பர்களும் இருந்த அவை. புவியரசை வாழ்த்தி மலர்மாலை அணிவித்து பரிசளித்தோம். அரங்கசாமி ஒரு மலர்முடி சூட்டலாம் என்றார். அது வழக்கமில்லை என மற்ற நண்பர்கள் சொன்னபோது “இல்லை, அது ஓர் அடையாளம். எங்களுக்கு இலக்கியவாதிகள்தான் அரசர்கள், தேவர்கள் என்று காட்டும் ஒருவகையான அறிவிப்பு அது” என்று சொல்லி அடம்பிடித்து நிறைவேற்றிவிட்டார். புவியரசு மலர்முடி சூட்டப்பட்டதும் வெடித்துச் சிரித்துவிட்டார்.
விழாவுக்கு பவா செல்லத்துரை வர இயலவில்லை, படப்பிடிப்பில் இருந்தமையால் வர இயலவில்லை என்று செய்தி அனுப்பியிருந்தார். மரபின் மைந்தன் முத்தையா, இயகாகோ சுப்ரமணியம், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன்.
நிகழ்வுக்கு பின்னர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்த நண்பர்கள் உணவுண்டு பிரிய பத்தரை மணி ஆகிவிட்டது. அதுவரை சிரிப்பும் கொண்டாட்டமுமாகப் பேசிக்கொண்டிருந்தோம். புவியரசு மகிழ்ச்சியாக சிரித்தபடியே இருந்தார். விடுதிக்குக் கிளம்பும்போது இனிய நாள் ஒன்றின் நிறைவை உணர்ந்தேன்.