அன்புள்ள நண்பர்களுக்கு,
தொடர்ச்சியாக புதியவாசகர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கமான சந்திப்பு நிகழ்ச்சிகளில் தெரிந்த நண்பர்கள் சூழ இருப்பதனாலும் முன்கூட்டியே ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதனாலும் புதியவாசகர்கள் என்னை வந்து இயல்பாகச் சந்திப்பது கடினமாக இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆகவே முற்றிலும் புதியவாசகர்களுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடுசெய்தாலென்ன என்னும் எண்ணம் வந்தது. இதில் என் நண்பர்களான பழைய வாசகர்கள் கலந்துகொள்ளக்கூடாது. நிகழ்ச்சி அமைப்பாளர்களைத்தவிர. அவர்களும் சந்திப்புகளில் ஏதும் பேசக்கூடாது. அதிகபட்சம் ஓரிரு முறை வந்து முழுமையாக அறிமுகமாகாத வாசகர்களும் புதியவாசகர்களும் மட்டும் கலந்துகொள்ளலாம்.
ஜனவரி 30,31 பிப்ரவரி 6,7 பிப்ரவரி 13,14 ஆம் தேதிகளில் வைத்துக்கொண்டாலென்ன என்று எண்ணுகிறேன்.
சந்திப்பை ஊட்டி நித்யசைதன்ய யதி குருகுலத்தில் வைத்துக்கொள்வது பலவகையிலும் வசதி. அச்சூழல் இயல்பான உரையாடலுக்கும் அதனூடாகத் தனிப்பட்ட உறவுமலர்தலுக்கும் வழிவகுக்கும். ஒரு சனி காலைகூடி ஞாயிறு மாலை பிரிந்தோமென்றால் அணுக்கமாக உணர்வோம். அல்லது கோவையில் அல்லது சென்னையில் சந்திப்பை அமைக்கலாம். ஆனால் அது இயல்பான உரையாடலாக அமைவதில்லை.
குறைந்தது பத்துபேர் வருவதாக உறுதியளித்தால் மட்டுமே இதை அமைக்கலாமெனத் தோன்றுகிறது. வாசகர்கள் தங்கள் வருகையை அறிவிக்க எழுதலாம் [jeyamohan.writer@gmail.com]
ஊட்டியில் மே மாதம் நிகழும் சந்திப்பு வேறு. அது வழக்கமானது. இது ஒரு எளிய சிற்றுரையாடல். திட்டங்கள் ஏதும் இல்லை. அமர்வுகளும் இல்லை. சும்மா பேசிக்கொண்டிருத்தல் மட்டுமே.
ஜெ