உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பும், தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக் படித்தேன். சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு இங்கிலாந்தில் நார்விச் நகரத்துக்கு வந்தேன். கடந்த பத்து வருடங்களாக லண்டன் காப்பீடு மற்றும் வங்கி சார்ந்த தகவல் தொழில்நுட்பத்துறையின் மென்பொருள் கட்டுமானம் சார்ந்த வேலையில் இருக்கிறேன்.
மனைவி மற்றும் இரு மகள்கள்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
வாசிப்புப்பழக்கம் அப்பாவிடமிருந்து தொடங்கியது. நிறைய வாசிப்பவராக இருந்த அப்பாவின் மேஜை மீது காந்தியின் சத்தியச்சோதனை கண்டதுண்டு. அவரிடம் அது பற்றிப் பேசியதில்லை, ஆனால் இப்போது யோசிக்கும்போது அவருக்கு காந்தியின் பல முகங்கள் மீது ஈடுபாடு இருந்தாகத் தெரிகிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (Commerce) துறையின் தலைவராக இருந்தபோது அவர் “கிராமிய வங்கியியல்” எனும் நூலை தமிழில் எழுதியிருந்தார். கிராமீன் வங்கியியல் பற்றிய தமிழ்த்துறை அறிமுக நூல் என இன்று அறிகிறேன். அதைப்புரட்டிப்பார்த்து புரியாமல் வைத்திருக்கிறேன். பாரதியின் சில பாடல்களைக் கற்றுக்கொடுத்ததுடன் “ஆவி உலகம்” பத்திரிக்கையையும் என் அக்காக்கள் அறிமுகப்படுத்தினர். காமிக்ஸுடன் சேர்ந்து ஆவி உலகமும் ஒரு பழக்கமாகப் பள்ளி நாட்களில் தொடர்ந்தது. பின்னர் கல்கி, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர் என பள்ளி காலத்தில் படித்த பின்னர் கல்லூரிக்குப் பின் தி.ஜானகிராமன், காப்ரியல் கார்சியா மார்க்கெஸ், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆத்மாநாம், வண்ணநிலவன், ஜெயமோகன் எனத் தீவிர இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. 2003/4 காலகட்டங்களில் முரகாமி மற்றும் ஓரான் பாமுக் மீது பிடிப்பு தொடங்கியது. ஐரோப்பிய எழுத்தாளர்கள் மாப்பஸான், சார்லஸ் டிக்கன்ஸ், ப்ரெளஸ்ட், கால்வினோ , மிஷல் வெல்பெக் போன்றவர்களது படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். ஐரோப்பிய இசையும், இசை ஆளுமைகளையும் பல வருடங்களுக்காகத் தொடர்ந்து கற்று வருகிறேன். படைப்பாற்றலின் சில உச்சகட்ட தருணங்களை இசை ஆளுமைகளின் கலை வெளிப்பாட்டில் உணர்ந்திருக்கிறேன். ஆழ்வார்களில் நம்மாழ்வார், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், பிரமிள், ஜெயமோகன், வாக்னர், ஜார்ஜ் ஆர்வெல் என் ஆதர்சங்கள்.
சிறுகதைகளை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ன? இதை உங்கள் முதன்மை வடிவமாக தேர்ந்தது ஏன்? குறிப்பாக இசை சார்ந்தும் அசல் வரலாற்று ஆளுமைகள் சார்ந்தும் எழுதுவதில் உள்ள சவால்கள்
தமிழில் சிறுகதைகள் மிகச் சிக்கலான காலகட்டத்தை அடைந்துள்ளன. மிகப் பிரமாதமான சிறுகதைகள் நூற்றுக்கணக்கில் வந்துவிட்டன. அவை தொட்டு மீட்டிய வாழ்வின் கணங்கள் நம்முன்னே உயிர்ப்போடு இன்றும் உள்ளன. இன்று ஒரு நவீனக் கதையில் புதுமைப்பித்தனைப்போல காஞ்சனையின் மனதை பூடகமாகச் சொல்லிக் கடக்க முடியாது. இன்றைய நரம்பியல், மனோத்துவம் போன்ற துறைகளைக் முன்கடந்து புனைவெழுத்தளன் செல்ல வேண்டி உள்ளது. இது புனைவுக்கும் அறிவியலுக்கும் நடக்கும் விவாதம். மெல்லுணர்வுகள் காலாவதியாகிவிடவில்லை. ஆனால் அவற்றின் வெளிப்பாட்டுத்தன்மை மாறிவிட்டன.
ஐரோப்பிய இசை மேதைகளில் பலரும் படைப்பாற்றலுடன் எழுதக்கூடியவர்களும் கூட. மிகத்துல்லியமாக தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்கக்கூடியவர்கள். அரூபத்தன்மைக்கொண்ட இசைக்கு பல அடுக்குகள் கொண்ட அர்த்தங்களையும் அர்த்தமின்மைகளையும் கொடுத்தவர்கள். கலைத்துறையின் நுண்ணிய அடுக்குகளுக்கு புனைவெழுத்து வடிவம் கொடுப்பது ஒரு சவால். தொகுப்பில் உள்ள சில இசைக்கதைகள் அதை ஒட்டி எழுதப்பட்டவை.
வரலாற்று நிகழ்வுகள் என்பன வரலாற்றுவாதத்தை ஒட்டியும் வெட்டியும் உருவாக்கப்படும் காலக்கேப்ஸூல்கள். பல விடுபடல்களும், பிறசேர்க்கைகளும் கொண்டது. அது தனக்குள் முழுமையானது எனச் சொல்லிவிடமுடியாது. வரலாற்றின் போக்கில் நடக்கும் தொடர்பற்ற பல காரணங்களை உள்ளடக்கியவை. அர்த்தமின்மையும், பூடகமும் நிறைந்திருப்பது என்றும் புனைவுக்கு நல்ல உள்ளீடாக அமையும். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த முடிவுக்கு சம்பந்தமற்ற போக்குகளை வரலாற்றுப்புனைவின் ஊடாக எழுதிவிடமுடியாது. சேர்த்தால் அது அபத்தமாகிப்போகும். அந்த வரலாற்று ஆளுமை அல்லது நிகழ்வின் பழுப்பு இடைவெளிகளை புனைவு வழியாகத் தொட்டுப்பேசும் இடங்கள் சவால் மிகுந்தவை.
காலத்தின் முடிவுக்காக ஒலிக்கும் இசை தொகுப்பில் உள்ள கதைகளை ஏதேனும் ஒரு புள்ளியில் தொகுத்து கூற இயலுமா
மனிதர்களிடையே அல்லது கலைக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் புரிந்துகொள்ளமுடியாத இடைவெளிகளை ஏதேனும் ஒரு விதத்தில் நம்மால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியுமா எனும் முயற்சிகளே இக்கதைகள்.
எதற்காக எழுதுகிறீர்கள்
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் கேள்விப்படும் கதைகளும், தேவதைக்கதைகள் போல நேரடியாகப் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தை இழந்துவிட்டன. இணையத்தின் வழி உலகம் ஒரு புள்ளியில் இயங்கத்தொடங்கிய நொடி முதல் நம் கதைகள் மிகச் சிக்கலாகிவிட்டன. எளிமையானது தான் எனச் சத்தியம் செய்யப்படும் கதைகளை யாரும் நம்பத்தயாராக இல்லை. இந்த அர்த்தமடிப்புகளுக்குள் சில சரடுகளை நம்மால் அர்த்தப்படுத்த முடியுமா, அதன் மூலம் சம்பவங்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டோமா எனும் பிரயத்தனமே இந்தப்பயணம். அதன் மூலம் உண்மையின் சிறு கீற்றையாவது தொட்டுவிட முடியுமா எனும் ஆதங்கமே எழுதுவதற்கான காரணம்.
அடுத்து என்ன?
இதுவரை எழுதிய இசைக் கட்டுரைகளைத் தொகுத்து வருகிறேன். நான் எழுதத்தொடங்கிய நாவலை இந்த வருடம் முடிக்க வேண்டும். சில அறிபுனை குறுநாவல்களுக்கான திட்டம் உள்ளது. நீண்டகாலமாகத் திட்டமிட்டிருக்கும் அபிரகாம பண்டிதர் பற்றிய நூலின் ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்க வேண்டும். இப்படி நிறைய கனவுகள் உண்டு.
***
===============================================================================
நூலாசிரியர்கள்
![]() |
![]() |
பாலசுப்ரமணியம் முத்துசாமி | இன்றைய காந்திகள் |
பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]
பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
![]() |
![]() |
விஜயராகவன் | தேரையின் வாய் |
பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
![]() |
![]() |
நாகப்பிரகாஷ் |
எரி |
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
![]() |
![]() |
ஸ்ரீனிவாசன் |
கூண்டுக்குள் பெண்கள் |
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
![]() |
|
நரேந்திரன் |
இந்தக்கதையை சரியாகச் சொல்வோம் |
பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்
நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
![]() |
![]() |
சா.ராம்குமார் |
அகதி |
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
![]() |
|
சுசித்ரா |
ஒளி |
பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா
பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
![]() |
![]() |
காளிப்ரசாத் |
தம்மம் தந்தவன் |
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
![]() |
|
கிரிதரன் ராஜகோபாலன் |
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை |
பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
![]() |
|
ராஜகோபாலன் | ஆட்டத்தின் ஐந்து விதிகள் |
பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்
ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை