ஆதியில் சொல் இருந்தது. அதில் ஒலி இருந்தது. அது காற்றில் பரவியவுடன் கேட்க செவிகள் இருந்தன. பின்னர் அச்சொல் மனதில் விழுந்து அதன் பொருள் நுண்ணிய அலைகளாய் சிதறி ஆன்மாவில் கலந்தது. ஒவ்வொரு ஆன்மாவும் நுண்மையாய் கலந்தியங்கத் துவங்கியது. ஆன்மாக்கள் கூடி கூட்டு மனம் ஆனபின் அவை கதைகளாக மனதில் சேகரம் ஆகின. அது ஒரு தொல் மரபை உருவாக்கியதும் அங்கிருந்து துவங்கின வழி வழியாக கதை கூறல்கள்.
அந்தக் கதைகளின் வழியே சித்திரங்கள் உருவாகின. அந்தச் சித்திரங்கள் படிமங்களான பின் அவை எழுத்தாகப் பரிணமித்தன. எழுத்துக்கள் சொற்களான பின் மீண்டும் கதைகளாகி கற்கள், பாறைகள், சிலைகள் எனப் பயணித்து காகிதங்களில் அச்சேறி மீண்டும் தொல் மரபை அறியாத மனங்களிடம் வந்து சேர்ந்தன. அவை இப்போது ஒலி ஒளி வடிவமாக எண்ணற்ற செவிகளின் வழி நுழைந்து ஆன்மாக்களில் பட்டுத் தெறிக்கிறது பவா எனும் கதை சொல்லியின் மூலம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலான இலக்கிய செயல்பாட்டில் அவருடன் தொடர்பில் இருக்கும் இலக்கிய, திரை ஆளுமைகள், வாசகர்கள் ஏராளம். இந்தக் கொரோனா காலத்திலும் அவரை நோக்கி வந்து கொண்டே இருப்பவர்களை இறுக்கி அணைத்து தனது கதை கூறல் மூலம் மனம் கசியச் செய்கிறார். அவரின் கதைத் தேர்வு முக்கிய அம்சமாக இருந்தாலும் ஒரு சினிமாவாக உருவாகிய சிறுகதை/நாவல் தரும் ஏமாற்றம் போலில்லாமல் நம்மை அறியாமல் நம் ஆழ்மனதின் விரிந்த பரப்பில் கிடக்கும் ஏதோவொன்றை எடுத்து வெளியே போடுகிறார்.
ஒரு தாய் தன் குழந்தையின் தலையை வருடுவது போல, ஒரு தந்தை வாஞ்சையுடன் தன் குழந்தையை அணைப்பது போல கதைகளால் அரவணைக்கிறார் பவா. கதைகளையும் சுமக்கிறார். நாமறிந்த கதைகள் எழுத்தின் வழி ஒரு சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. தானே தன் ஆன்மாவை உணர்வது போல தன்னைத் தானே வாசகன் அதில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதே கதை, அதே களம். ஆனால் பவா செல்லதுரை சொல்லும் போது மட்டும் ஒருசேர அனைத்து இதயங்களையும் கசிய வைக்க முடிகிறது எனில் அவரிடம் ஏதோவொன்று இருக்கிறது என தேடச் செய்கிறது. தன் கதை கூறல்கள் மூலம் பவா ஒவ்வொருவரின் குழந்தைமையையே தொடுகிறார். “ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு இருந்துச்சாம்… அதுல பெரீய்ய ஆனை இருந்துச்சாம்…அது மரத்தை தன்னோட பெரீய்ய தும்பிக்கையால புடிச்சு இழுத்துச்சாம்…” என்று என் 4 வயது மகனுக்குச் சொல்லும் வெறும் கற்பனையை விழிகள் அகலத் திறந்து தன் உள்ளத்தில் வண்ணச் சித்திரங்களாய் சேமித்துக் கொள்வதைப் போல எழுத்துக்களாய் ஓடிக் கொண்டிருக்கும் கதைகளை தன் ஆன்மாவில் சேகரமான வாழ்க்கை எனக் கண்டு நமக்குச் சொல்கிறார். அந்தக் கொஞ்சிக் கூறும் குரல் வளம் எத்தனையோ ஆளுமைகளுடனான தொடர்புக்குப் பின்பும் விட்டுவிடாத மேற்பூச்சு இல்லாத கிராமத்து எளிய மனங்கொண்ட முகமானது ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தையை, அன்பான அண்ணனை, ஆதரவான தோழமையை, ஆசானை, நாம் உயர்வாக நினைக்கும் ஆளுமையை எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் அன்னையை நினைவூட்டுகிறது.
சொற்களால் கட்டமைந்த கதைகளின் மையத்தை நோக்கி தன் கவித்துவமான மொழிதலால் அழைத்துச் சென்று அதன் அழகை ஒளி மிளிரக் காட்டுகிறார். கதையை சொல்கிறார் என்பதைவிட நவில்கிறார் என்ற சொல்லே சரியாக இருக்கும். அவரது கதை கூறல் முறை தாலாட்டைப் போல மயங்குறச் செய்கிறது. கடல் நீரைக் கீழமிழ்த்த அலை மீண்டும் மேல் தூக்கி கீழமிழ்த்தி மீளச் செய்து நீராலான ஊஞ்சலாட்டம் ஆடச் செய்வது போல இருப்பதாலோ என்னவோ நம்மையறியாமல் நெகிழ்ந்து கேட்கிறோம்.
யோகிராம் சுரத்குமார் நட்பாகட்டும், நடிகர் மம்மூட்டியின் நட்பாகட்டும், இயக்குநர் பாலுமகேந்திரா, கிறிஸ் ஃபாலன் உறவென்றாலும் சோற்றுக் கணக்கின் கெத்தேல் சாகிப்புடன் பழகியது போன்ற உணர்வென்றாலும், “உங்க எல்லாருக்கும் தெரியுமோ என்னவோ…” என்று அவர் இழுத்துச் சொல்லும் அந்த மொழி ஏதோ ஒரு தொல் காலத்தைச் சேர்ந்தது போன்ற உணர்வைத் தருகிறது.
கம்பீரத் தோற்றம் கொண்ட அவருடைய குரலில் இழைந்தோடும் குழைவு, வாஞ்சை, நகைச்சுவை உணர்வு, அழுகை, விசும்பல் என எல்லாம் சேர்ந்து வாசகனைக் “கேட்க“ வைக்கிறார். கேட்பவர்களின் குழந்தைமையை தொட்டு சிறிது நேரம் கண் முன்னே மிதக்க விட்டு ரசிக்கிறார்.
கதைகளின் அறியப்படாத பக்கங்களை நம் ஆழ்மனத்துள் நேரடியாக தன் கூறல் வழி சொல் சொல்லாக ஊற்றுகிறார். அந்த ஊற்று ஆன்மாவில் நிரம்பி வழிந்து கண்களின் வழி கசிகின்றது. அதுவே அவரைக் கேட்பவனை தன் அகங்காரத்தை எல்லாம் விட்டொழித்து அவர் மடியில் சிறிது இளைப்பாறலாம் என்ற உணர்வில் கதை கேட்கும் தொல் மனதை ஒப்புக் கொடுக்கச் செய்கிறது. அதுவே அந்தக் கலைஞனின் கதை கூறலின் வெற்றியாகவும் இருக்கிறது.
ஆனால் இதையும் ஒரு சின்னப் புன்னகையுடன் கவித்துவம் நிறைந்த குழந்தைக்குரிய சொல்லாடலுடன் தாண்டிச் சென்று கொண்டே இருப்பார் பவா எனும் அந்தக் கதை சொல்லி.
அன்புடன்
க.ரகுநாதன்