விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியலைப் பார்த்தேன். தொடர்ச்சியாக வாசிக்கிறேன். நான் விழாவுக்கு வரமுடியாத தொலைவில் இருக்கிறேன். ஆனாலும் இந்த விழாவில் மானசீகமாகக் கலந்துகொள்கிறேன். இந்த விருந்தினர்களின் எழுத்துக்களைப் பற்றிய கட்டுரைகள், அறிமுகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கடிதங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்கின்றன. எனக்குச் சில சந்தேகங்கள். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
முதல்கேள்வி, இந்த விருந்தினர் பட்டியல் எப்படி தயாராகிறது? இதற்கு ஏதாவது அளவுகள் உண்டா? இரண்டாவது கேள்வி, இந்த விருந்தினர்களில் பலர் இளம் எழுத்தாளர்கள். அவர்களில் சிலர் ஒரு தொகுப்புகூட போடாதவர்கள், அல்லது முதல் தொகுப்பு மட்டும் போட்டவர்கள். அவர்களின் படைப்புகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் பாராட்டுக்களும் விவாதங்களும் அவர்களுக்குக் கூடுதலான தன்னம்பிக்கையை அளித்து அவர்கள் எழுதுவதே இலக்கியம் என்று எண்ணவைக்கும் என்று எனக்கு படுகிறது. அவர்களுக்குத்தேவை கறாரான விமர்சனமே ஒழிய இந்தவகையான திடீர்ப் புகழ் அல்ல.
அத்துடன் விருந்தினர்களின் பட்டியலில் இதழாசிரியரான கோகுல் பிரசாத் இருக்கிறார். அவர் பிராமணர்களைப் பற்றிய மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். கடுமையான என்று மரியாதையாகச் சொல்கிறேன். தரமற்ற விமர்சனங்கள் அவை. அதாவது வெறும் காழ்ப்புகள். விஷ்ணுபுரம் அமைப்பு இப்போது அந்த திசைநோக்கிச் செல்கிறதா என அறிய விரும்புகிறேன். இது ஒரு தொடக்கமா?
அருண் ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள அருண்,
ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் நிகழ்வுகள் பற்றிய வெவ்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கிறது. இது ஓர் உரையாடல் அமைப்பு என்பதனால் இவ்விவாதம் தேவையாகிறது. இலக்கிய ஆர்வம் கொண்ட அனைவரும் கேள்விகேட்கத் தகுதி கொண்டவர்கள். பதில்சொல்ல நாங்களும் கடமைப்பட்டவர்கள்.
விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கு இயல்பாக ஒருங்கிணைந்து வந்த ஒன்று. 2015 வரை முதல் ஆறாண்டுகள் முந்தையநாளில் இலக்கியச் சந்திப்புகளை தன்னிச்சையாக நிகழ அனுமதித்தோம். அதாவது வாசகர்கள் வந்து கூட ஓர் இடம், ஒரு கல்யாண மண்டபம் அளித்தோம். அங்கே எழுத்தாளர்களை வரவழைத்தோம். அவர்கள் தங்கள் விருப்பப்படி சந்தித்து உரையாடலாமென ஏற்பாடுசெய்தோம்.
அந்தச் சந்திப்புகள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தன. பல இனிய நினைவுகள். ஆனால் மெல்லமெல்ல கூட்டம் பெருகியது. இருநூறுபேருக்குமேல் அரங்குகளில் பங்கெடுக்கலாயினர். அந்நிலையில் உரையாடலை ஒழுங்குசெய்யவேண்டிய தேவை எழுந்தது. குறிப்பாக நிகழ்ச்சி உயர்ந்த மேடையில்தான் நிகழமுடியுமென்று ஆயிற்று. அவ்வாறுதான் இன்றைய எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு உருவாகியது.
இது ஓர் எழுத்தாளரை வாசகர்கள் உசாவி அறிய முயல்வது. அந்த எழுத்தாளரின் புனைவுகள், அவருடைய வாழ்க்கைப் பார்வை பற்றிய கேள்விகள் வழியாக அவரை அணுகுவது. ஒரு கேள்வி-பதில் நிகழ்வு. ஆனால் அச்சில் வாசிக்கும் பேட்டிக்கும் இதற்குமான வேறுபாடு என்பது நேருக்குநேர் ஆசிரியரை வாசகர்கள் சந்திப்பதுதான்.
இந்த நிகழ்வுக்கு எப்படி இலக்கிய ஆசிரியர்களை தெரிவு செய்கிறோம்? எழுத்தாளராக தங்கள் இடத்தை நிறுவிக்கொண்டவர்களை அழைக்கிறோம். சோ.தர்மன் அல்லது எம்.கோபாலகிருஷ்ணனுக்கு இலக்கியத்தில் இடம் ஏற்கனவே அமைந்துவிட்டிருக்கிறது. இளம்படைப்பாளிகளில் குறிப்பிடும்படியான தொடக்கம், நல்ல படைப்புகள் வழியாக சூழலில் அறிமுகம் கொண்டவர்களை அழைக்கிறோம்.
என் தளத்தை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எவர் அழைக்கப்படுவார் என்பதைச் சொல்லிவிட முடியும். குறிப்பிடத்தக்க படைப்பாளிகளை எவரேனும் இங்கே பரிந்துரை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நல்ல படைப்புகள் பற்றியும் இங்கே பேசப்பட்டிருக்கும். அவ்வாறு பேசப்பட்டவர்களை நண்பர்களுடன் விவாதித்து நான் பரிசீலிக்கிறேன். அவர்களின் படைப்பியக்கம் மற்றும் இலக்கியம் மீதான நம்பிக்கை ஆகியவற்றையே அளவுகோலாகக் கொள்கிறேன். அவ்வாறு செயல்படும் அனைவருமே அழைக்கப்படுவார்கள்.
எவர் தவிர்க்கப்படுவார்கள்? இலக்கியத்தை முதன்மையாக எண்ணாமல் வெறும் கட்சியரசியல், காழ்ப்புகள், வெறும் இலக்கிய வம்புகள் என அலைபவர்களை அழைப்பதில்லை. அவர்களுக்குரிய அரங்கு அல்ல இது. இதன் மனநிலையும் மொழியும் முற்றிலும் வேறு. அவர்கள் தங்களுக்குரிய களங்களில் பேசிக்கொள்ளலாம். அவர்கள் எங்கே என்ன பேசினாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்களை பார்வையாளர்களாகவும் நாங்கள் விரும்பவில்லை.
இளம் வாசகர்களுக்கான அரங்கில் பங்குபெறுபவர்களுக்கான அளவுகோல் சற்று நெகிழ்வானதுதான். ஏனென்றால் எவர் எவ்வண்ணம் எழுவார் என முன்னரே சொல்லிவிட முடியாது. வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்பதுதான் என் எண்ணம். அவர்கள் மேல் வாசகர் கவனம் விழுகிறது, வாசகர்களுடன் அவர்கள் உரையாடுகிறார்கள். அவ்வாய்ப்பை அவர்கள் எவ்வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் திறன், நல்லெண்ணம் சார்ந்தது.
மிகையான புகழ் இங்கே உள்ளதா? தமிழில் பெரும்பாலும் எந்த எழுத்தாளரும் அவர்களின் தகுதிக்கேற்ப புகழை அடைந்தவர்கள் அல்ல. என் தலைமுறையில் எனக்கு ஓர் ஏற்பு உள்ளது. அதன் விளைவே இந்த விழா. மற்றபடி இளம்படைப்பாளிகள் முதல் மூத்தவர்கள் வரை அனைவருமே சூழலால் பொருட்படுத்தப் படாமல் இயங்குகிறார்கள் மட்டுமே. இந்த ஒரு தளத்தில் இந்த விழாவை ஒட்டி அவர்கள்மேல் கவனம் குவிக்கப்படுகிறது, அவ்வளவுதான்.
கறாரான விமர்சனம் என்பது கடும் விமர்சனமாக இருக்கவேண்டியதில்லை. வாசகர் அல்லது விமர்சகர் எந்த அளவுக்கு ஒரு படைப்பை புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை ஒட்டியே எந்த விமர்சனமும் பொருட்படுத்தத் தக்கதாக்குகிறது. நுண்ணுணர்வற்ற ஒருவர் படைப்பின் ஆழ்தளங்களை உணராமல் சொல்லும் கடும் விமர்சனம் ஒருவகை அசட்டுத்தனமாகவே கருதப்படும். அதற்கு இத்தகைய அரங்குகளில் இடமில்லை.
எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் அவரை ஆழ்ந்து பயின்று, கேட்டதுமே முக்கியமானது என்று எந்த வாசகருக்கும் தோன்றும்படியான ஒரு விமர்சனத்தை முன்வைப்பது எளிதல்ல. அத்தகைய நுண்வாசகர்களை எதிர்நோக்கியே படைப்பாளிகளை முன்வைக்கிறோம். அத்தகைய விமர்சனங்களை மென்மையாக, நட்பார்ந்த முறையில் முன்வைக்கவே இவ்வரங்குகள்.
கோகுல் பிரசாத் பிராமணர்களைப் பற்றி ஏதோ கடுமையாகச் சொன்னார் என்று நாலைந்து கடிதங்கள் வந்தன. ஆனால் எங்கள் அரங்குகளில் முன்னரும் அதைவிடக் கடுமையான பிராமண எதிர்ப்புக் கருத்துக்களைச் சொன்ன லீனா மணிமேகலை போன்றவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அது இங்கே இருக்கும் ஒரு சிந்தனைப்போக்கு அல்லது மனப்போக்கு. நான் அதை ஏற்பவன் அல்ல. எந்த ஒரு இனக்குழு, பண்பாட்டுக்குழு மீதும் பொதுவான காழ்ப்பை வெளிப்படுத்துவது அறிவியக்கவாதிக்கு மாண்பல்ல என்பதே என் உறுதியான நிலைபாடு
திரு கோகுல் பிரசாத் தமிழினி இணைய இதழை முக்கியமான இலக்கிய இதழாக நடத்திவருகிறார். ஆழமான கட்டுரைகளை வெளியிடுகிறார். கதைத்தேர்வில் ரசனை உள்ளது. இன்றையசூழலில் அத்தகைய ஆசிரியத்துவம் கொண்ட இதழின் பணி மிக முக்கியமானது. ஆகவே அவருடைய பங்களிப்பு பெரியது. அதன்பொருட்டே அவர் அழைக்கப்படுகிறார். அவருடைய இலக்கிய அளவுகோல்கள் என்ன, அவருடைய தனிப்பட்ட காழ்ப்புகள் அதில் என்ன இடம் வகிக்கின்றன என்பதையெல்லாம் வாசகர்கள் அவரிடமே கேட்கலாம்.
நாங்கள் ஒரு களத்தை மட்டுமே அமைத்துத் தருகிறோம். அதை அடிப்படையான சமநிலையை பேணியபடி நடத்துவது பங்கேற்பவர்களின் பொறுப்பு
ஜெ
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்