2018 விஷ்ணுபுரம் விருது பேரா.ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விழாவில் சிறப்புவிருந்தினராகா வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொள்கிறார். மலையாளச் சிறுகதை ஆசிரியரும் திரைப்பட இயக்குநருமான மதுபால் இன்னொரு சிறப்பு விருந்தினர்.
1961ல் பாலக்காட்டில் பிறந்த மதுபால் பொருளியலில் பட்டம்பெற்றபின் சிறிதுகாலம் இதழாளராகப் பணிபுரிந்தார். அப்போது சிறுகதையாசிரியராக மாத்ருபூமி வார இதழ் வழியாக அறிமுகமானார். ஈ ஜீவிதம் ஜீவிச்சு, ஹீப்ருவில் ஒரு பிரேமகானம், பிரணியிகளூடே உத்யானமும் கும்பசாரக்கூடும், கடல் ஒரு நதியுடே கதயாணு, மதுபாலின்றே கதகள், அவன் மார்ஜாரபுத்ரன் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ஃபேஸ்புக் என்னும் நாவலும் வெளியாகியுள்ளன.
பின்னர் ராஜீவ் அஞ்சல், பரத் கோபி ஆகியோரிடம் உதவி இயக்குநராக திரைப்படங்களில் பணியாற்றினார். 1994 ல் காஷ்மீரம் என்னும் படத்தில் இணைக்கதாநாயகனாக அறிமுகமாகி கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்திருக்கிறார்.
மதுபால் இயக்கத்தில் 2008ல் வெளியான தலப்பாவு நக்ஸலைட் இயக்கத்தின் தலைவராக இருந்த வர்கீஸின் கொலையைப்பற்றி அந்தக்கொலையை மேலதிகாரிகளின் ஆணைப்படி செய்ய நேர்ந்த பி.ராமச்சந்திரன் நாயரின் இறுதிக்கால வாக்குமூலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆறு விருதுகள் வென்ற படம் அது.
மதுபால் இயக்கத்தில் ஜெயமோகன் எழுதி வெளியான ஒழிமுறி 2012ல் வெளிவந்தது. ஏழு திரைப்படவிருதுகள் பெற்ற படம் அது. அதன்பின் செக்மெண்ட் என்னும் படம் வெளிவந்தது. இவ்வாண்டு வெளியாகியிருக்கும் ஒரு குப்ரசஸ்தனாய பையன் ஒரு சட்டவிசாரணைப் படம். வசூல் அளவில் பெரிய வெற்றிபெற்றது.
5 thoughts on “விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்”
Comments are closed.