சார் வணக்கம்
இந்த இரண்டு நாட்களும் எத்தனை வேகமாய் முடிந்துவிட்டதென்ற ஆதங்கத்துடனேதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய கடந்த டிசம்பரிலிருந்தே இந்த விழாவின் பொருட்டு நாங்கள் பலர் காத்துக்கொண்டிருந்தோம். பொள்ளாச்சியிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் குக்கிராமத்திலிருந்து கோவையில் விழா நடக்கும் இடத்திற்கு வரவேண்டுமென்பதால் நேற்று அதிகாலையிலேயே எழுந்து புறப்படத்துவங்கினேன். மார்கழி துவக்கம் என்பதால் எங்களூரில் சங்குபிடிப்பவர் கருக்கிருட்டிலேயே வீடு வீடாக வருவார். நேற்று அவர் என் வீட்டுக்கு வருகையில் நான் அவருக்கு முன்னரே எழுந்து புறப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து அவருக்கே ஆச்சர்யமாயிருந்திருக்கும். என்னவோ நானே விருது வழங்குவதைப்போல அல்லது எனக்கே விருது தருவதைப்போல அத்தனை பரபரப்பு, அத்தனை பதற்றம் அத்தனை எதிர்பார்ப்புடன் விழாவிற்கு வந்தேன்.

அசோக் குமார் மற்றும் தூயன் ஆகியோரின் முதல் அமர்விற்கே சரியாக வந்துவிட்டோம் நானும் சரணும். அமர்வுகள் துவங்குவதற்கு முன்னர் விஷ்ணுபுரம் குழுமத்திலிருப்பவர்கள் எல்லாம் ஒரு குடும்பம் போலவே இருப்பதால் நாய்க்குட்டி எப்படி இருக்கு? தென்னை மரம் பிழைச்சுதா? புடவை நல்லா இருக்கு என்றெல்லாம் நலம் விசரித்துக்கொண்டிருந்தோம். பின்னர் அமர்வு துவங்கியதும் யாரும் அறிவுறுத்தாமலேயே அனைவரும் ஒரு ஒழுங்கிற்கு வந்து கவனிக்கவும் கேள்விகள் கேட்பதும் உரையாடல்களை கவனிக்கவுமாய் இருந்தோம்.

அந்த அமர்விலிருந்து இரண்டாம் நாளான இன்று வரை கேட்கப்பட்ட பலதரப்பட்ட கேள்விகளில் மிக plain ஆக இருப்பவற்றை நீங்கள் வண்ணமேற்றி மிக அழகாக அரங்கிலிருந்த அனைவருக்கும், கேள்விகளை எதிர்கொள்பவருக்கும், ஏன் சில சமயங்களில் கேள்வி கேட்டவருக்கே புரியும்படியும் மாற்றி அமைத்து கொடுத்து உதவிக்கொண்டிருந்தீர்கள்.
நம்பிக்கை ஊட்டும் எழுத்துக்கள் அவர்களுடையது என்பதைச்சொல்லி அவ்விரு எழுத்தாளர்களையும் சிறப்புச்செய்தார் திரு பாவண்ணன்
அடுத்த அமர்வில் திரு அபிலாஷ் அவர்களிடம் கேட்கப்பட்ட பலதரப்பட்ட கேள்விகள் அமர்வை மிகச்சுவையானதாக்கியன, முகநூலில் அவரின் பங்களிப்பு, அவர் வாழும் நிலத்துடனான அவரின் தொடர்பு, அவரின் மானசீக கதைக்களம், அவரின் தேடல், கதைகளின் நோக்கம் என்றூ மிகச்செறிவான உரையாடலகளாக இருந்தன. கோட்படுகளின் அடிப்படையில் அவர் கதைகளை மாற்றி அமைத்ததுண்டா என்னும் கேள்விக்கு அவரின் பதில் மிகசிறப்பானதாக இருந்தது.
அடுத்த விஷால் ராஜா மற்றும் சுரேஷ் பிரதீப்பின அமர்வு. முனைவர் பட்ட ஆய்வின் வாய்மொழித்தேர்வினைபபோலவே தெரிந்தது, அந்த அளவிற்கு இரண்டு வளரும் எழுத்தாளர்களிடமும் சராமரியாய் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரே கேள்விக்கு மேடையில் இருக்கும் இரு சமகால, சமவயது எழுத்தாளர்கள் வேறு வேறுவிதமாக பதிலளித்தது கவனிக்கத் தக்கதாக இருந்தது. கதைக்களம் எப்படி தெரிவு செய்யப்படுகின்றது, அவர்கள் சந்திக்கும் பிரபல ஊடகங்களின் நெருக்கடிகள், எழுத்தினை கூர்ப்படுத்தும் விமர்சனங்கள், என்பது போன்ற ஏராளமான கேள்விகளும் மிக விளக்கமான பதில்களுமாய் இருந்தது
.

என்னும் அமைப்பிற்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கிறாரகளா? என்னும் முக்கிய வினா ஒன்றிற்கு ’’இல்லை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பின் முன் சில கேள்விகளை வைக்கிறார்கள்’’ என்னும் மிகச்சாமார்த்தியமான பதில் சொல்லப்பட்டது. தொடர்ந்த உள்நொக்கத்துடனான் எதிர்வினைகள் சமயங்களில் வாசகனின் விருப்பத்திற்கேற்ப எழுத்தாளனை மாற்றி விடும் அபாயம் பற்றியும் இந்த அமர்வில் விவாதித்தோம் . .
போகன் சங்கரின் அடுத்த அமர்வு மற்ற அமர்வுகளிலிருந்து மிக மாறுபட்டதாக இருந்தது. பிண்வறைக்கு அருகில் பணி செய்யும் அடிக்கடி தளர்ந்து போகச்செய்யும் சூழலில் இருக்கும் அவர் பேய்க்கதைகள்எழுதுவது குறித்த அனுபவங்கள் வாசகர்களுக்கு மிக புதிதாய் இருந்தது.
[வெண்பா கீதாயன்]
பலகோணங்களில் சொல்லப்படும் உண்மைகளையும், மனப்பிறழ்வு நோய் உள்ளவர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான வேறுபாடுகளும், ஒழுக்கமீறல் குறித்தும் amoral மற்றும் immoral இவை இரண்டுக்குமான தொடர்பும் விவாதிக்கபட்டது. போகன் சங்கரின் வெளிப்படையான அலட்டிக்கொள்லாத எதிர்வினைகள் ஆச்சர்யமூட்டின. சமீபத்திய மீனவர்களின் இறப்பையும் செம்மீனில் சொல்லப்படும் மீனவப்பெண்களின் கற்பு சார்ந்த நம்பிக்களுக்கும் இருக்கும் முரணைச் சொல்லி ஒழுக்கம் என்பதற்கான வரையறை குறித்த அவரின் பேச்சு கவனிக்க வேண்டிய ஒன்றாக இருந்தது
ஒலிப்புத்தங்கள், கிராபிக்ஸ் நூல்கள் இலக்கியமாகுமா?, வண்ணதாசனுக்கு மட்டுமேயான மிக அழகான திருநெல்வேலி என்று பல கருத்துகளை வேடிக்கையாக சொல்வது போல அழுத்தமாக சொல்லிக்கொண்டிருந்தார். அவரது கருத்து அரங்கில் அனைவராலும் ரசிக்கப்பட்டது. கவனித்தது மட்டுமல்லாது கைதட்டிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இந்த அமர்வில் அனைவரும் மகிழ்ந்திருந்தோம்
மதிய உணவிற்குப்பின்னர் கவிஞர் வெய்யிலின் கலகலப்பான அமர்வு மிக சுவாரஸ்யமாயிருந்தது, காலையில் எழுந்ததும் அவர் கவிஞரல்ல . வாழ்வின் ஆதாரமான பிரச்சனைகளை கவனித்தபின்னரே அவரால் எழுத்தில் ஒன்ற முடியும் என்றதும், அரசியலைத்தாண்டியும் அவர் மிக அழகான விஷயங்களைப்பேசி இருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ளும் அமர்வாயிருந்தது இது.
மாலையில் 5 பேர்களுடன் துவங்கிய அமர்வில் மலேசிய இலக்கியம் குறித்து மிக விரிவான அலசல் இருந்தது. நவீனைகுறித்து அறிந்து கொண்டது மலைப்பாக இருந்தது. மலேசிய இலக்கிய வரலாற்றை அத்தனை தெளிவாக அந்த இளைஞர் விவரித்தது ஆச்சர்யமூட்டுகின்றது

இரவு இலக்கிய வினாடி வினா அனைவருக்கும் மிக பிடித்த ஒரு நிகழ்வாக வருடா வருடம் இருந்து வருகின்றது. இந்த வருடம் பல தலைப்புகளில் மிகக்கடினக் கேள்விகள் கேட்கப்பட்டாலும் 40 கேள்விகளுக்கும் வாசகரகள் பதிலளித்து விட்டோம். வெண் முரசு வாசகர்களும் விஷ்ணுபுரம் குழுமத்தின் உறுப்பினர்களும் எத்தனை தீவிர வாசிப்பாளர்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்
திரு செந்தில் மிக அழகாக இந்த நிகழ்வினைக்கொண்டுசென்றார். பரிசாக கையழுத்திடப்பட்டுக்கொடுக்கப்பட்ட புத்தகங்கள் வாங்கியவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும் பரிசு கிடைக் காதவர்களை இன்னும் வாசிப்பில் தீவிரமாக ஈடுபடவும் தூண்டுகின்றது.
17ஆம் தேதி அமர்வுகள் முந்தைய நாளினைப்போலவே அழகாக இருந்தன. திரு கிருஷ்ணன் அவர்களின் ’’ கலங்கிய நதி ’’ அதிகம் அந்த அமர்வின் உரையாடலில் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.
பின்னர் சிறப்பு விருந்தினரும் விருது பெருபவருமான சீ. முத்துசாமி அவர்களின்அமர்வும் மிக செறிவானதாக இருந்தது. மலேசிய இலக்கியம் குறித்த பல புதிய விஷயங்களை வாசகர்கள் அறிந்து கொண்டோம். ’’ஓரியாடுதல்’’ போன்ற வார்த்தைப்பயன்பாடுகள் மலேசியாவிலும் குமரி மாவட்டத்திலும் கொங்கு வட்ட்டாரத்திலுமாய் புழக்கத்தில் இருப்பதெல்லாம் அறிந்துகொண்டோம்
பின்பு ஜேனிஸ் பேரியட்டின் அமர்வு. கல்லூரி மாணவி போல இருந்த அவர் விரிவுரையாளர் என்பதே வியப்பாக இருந்தது. அவரின் நிலம் மேல் படகு கதையின் பல அம்சங்ளையும் விவாதிதோம். இந்த வயதில், எனக்கு தெரிந்தவரை இத்தனை தெளிவாக, மேடையில் இருந்து கொண்டு அதுவும் மொழி தெரியாத ஒரு சூழலில் அழகாக புத்திசாலித்தனமாக கேள்விகளை புரிந்து நிதானமாக சிரித்த முகத்துடன் எதிர்வினையாற்றும் பெண் எழுத்தளர்கள் இங்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன் ’மைக்’ கில் பேசினாலும் இரகசியம் பேசுவதுபோன்ற இனிய மென்குரலும், அசைவுகளும் பாவனைகளுமான அழகிய உடல்மொழியும் தன்னம்பிக்கையுமாய் அவர் அனைவரின் பிரியத்திற்கும் உரியவாரானார்
விருது வழங்கும் நிகழ்வினைக்காட்டிலும் இந்த இரண்டு நாட்களின் பரந்த அனுபவங்கள் வாசகர்களுக்கு மிக அரிதானவையாகவும் பற்பல வாசல்களைத் திறப்பவையாக்வும் இருந்தது.
இன்னிகவு போல மிக நேர்த்தியாய் திட்டமிடப்பட்ட, பெருந்திரளாக வாசகர்கள் கலந்துகொண்டாலும் ஒழுங்குடன் நடந்து வரும் இலக்கிய நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் வேறெங்கும் இல்லை.
இன்னும் இரண்டு நாள் நிகழ்ச்சி இருந்திருந்தாலும் மகிழ்வுடன் கலந்து கொண்டிருந்திருப்போமென்றே நினைக்கிறேன்
நல்ல சுவையான விரிவான உணவும், செளகரியமான தங்குமிடங்களும், நல்ல இணக்கமான சூழலுமாய் நம் வீட்டுகூடத்தில் அமர்ந்து பல பிரபல முண்ணனி எழுத்தாளர்களுடன் இயல்பாய் உரையாடிக்கொண்டிருந்ததைப் போல ஒரு அழகிய அனுபவத்தை இந்த விழாவின் இரண்டு நாட்களும் அளித்தது. உங்களுக்கும் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டவர்களுக்கும் அனைத்து வாசகர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளுடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு மாதத்திற்கு முன்பே பேருந்தில் முன்பதிவு செய்து வைத்து, இரண்டு நாள் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ளும் எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் இருந்தேன்.. ஆனால் வியாழன் அன்று ஜலதோஷமாக ஆரம்பித்து, வெள்ளி கடும் உடல்வலி காய்ச்சலாக உருவெடுத்ததால், பெரும் ஏமாற்றத்துடன் தான், பதிவு செய்த பயணச்சீட்டுக்களை ரத்து செய்தேன்..
இரு நாட்களாக வாட்ஸப்பிலோ, facebook இலோ புகைப்ப்டங்களோ, செய்திகளோ வரும் என்று பார்த்திருந்தவனுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது.. 🙂 ..இன்று கானொளிகள், புகைப்படஙகள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். சீ முத்துசாமி அவர்கள் அற்புதமாக பேசியிருந்தார். கோர்வையான, கூரான பேச்சாக இல்லாத போதும், ஆத்மார்த்மாகாக இருந்தது பேச்சு. மிகுந்த தன்னடக்கத்தோடு, விஷ்ணுபுரம் விருதை பற்றியும், சென்ற வருடங்களில் விருது பெற்றவர்கள் பற்றியும், புகழ்ந்து , அவர்கள் வரிசையில் தான் வந்ததை சொல்லி பெருமை பட்டது, மலேசியாவில் நிலவும் வாசிப்பு சூழல், தீவிர இலக்கியத்திற்கு இருக்கும் மதிப்பு பற்றி ஆதஙகப்பட்டு பேசியது எல்லாம் பார்க்கும் போது, அவரை மனதிற்கு நெருங்கியவராக உணரச்செய்தது..
புலம் பெயர் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் , புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் மொழி அடையாளத்தை இழந்து கொண்டிருப்பதை பற்றி நீங்கள் கூறியதும், முத்துசாமி அவர்களின் ஆதஙகமும் சோர்வை அளித்தாலும், விஷ்ணுபுரம் விருது வருடதிற்கு வருடம் மேலும் மெருகடைந்து, மேலும் மேலும் சிறப்படைவதையும், பல விதஙகளில் கவன ஈர்ப்பு அதிகமாவதையும் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழா வரும் வருடங்களில் மேலும் சிறப்பும், மேன்மேலும் அங்கீகாரங்களும் அடைய இலக்கிய வட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மிக பெரும் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும்…
அடுத்த சந்திப்புக்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்,
அன்புடன்
வெண்ணி
***
அன்புள்ள ஜெயமோகன் சார்,
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்துவிட்டு நிறைவுடன் திரும்பினேன். ஏராளமான நண்பர்களைச் சந்தித்தேன். அரங்கில்நடந்த விவாதங்களைக் கூர்ந்து கேட்டேன். அற்புதமான கேள்விகள். வெயில், போகன் இருவரும் மிக ஆத்மார்த்தமாகவும் வெளிப்படையாகவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். இளம்படைப்பாளிகளும் தங்கள் தரப்பை உறுதியாக முன்வைத்தது ஊக்கமளிப்பதாக இருந்தது
இரவிலே உங்கள் அறையில் உரையாடல் நிகழ்ந்தது என்று என் நண்பன் சொன்னான். நான் வர விரும்பினேன். ஆனால் முதல்நாள் அரங்கிற்கு வந்திருந்த சற்று மூத்த எழுத்தாளர்களுடன் உரையாடியபோது ஒரு சின்ன சலிப்பு வந்தது. அவர்கள் எதையும் புதிதாகச் சொல்லமுடியவில்லை. ஃபேஸ்புக்கில் ஏராளமாக எழுதியவர்கலென்பதனால் அதையே சொன்னார்கள். அவர்களுக்கு நம்முடன் மீட்டிங் பாயிண்டே இல்லை. ஃபேஸ்புக்கே சலித்துப்போன காலம் இது. தேவதேவனை சும்மா பார்த்தேன். நாஞ்சில்நாடனிடம் ஒரு ஹலோ சொன்னேன். அதெல்லாம் உற்சாகமாக இருந்தது
ஆனால் என்னைப்போன்ற புதியவாசகர்களிடம் பேசியது மிகமிக திரில்லாக இருந்தது. முழு இரவும் பேசிக்கொண்டே இருந்தோம். இரவில் நான் நண்பர்களுடனேயே தங்கிக்கொண்டேன். பெயர் பதியவில்லை. சட்டவிரோதமான தங்கல்தான். என்னுடன் படிக்கும் நான்குபேர்வந்திருந்தார்கள். இரவு ரெண்டுமணிக்குப்போய் டீ குடித்துவிட்டு வந்தோம். மீண்டும் பேசிக்கொண்டே இருந்தோம். அரங்கிலே பேசியவிஷயங்களைப்பற்றித்தான் பேசினோம். இலக்கியத்துக்கு ஒரு epistemology வேணுமா என்பதுதான் பேச்சு.
மறுநாள் பி.ஏ.கிருஷ்ணன் உரையாடலிலும் அதுதான் பேசப்பட்டது. ஆனால் நாங்கள் பேசிக்கொண்ட அளவுக்கு அது சாராம்சமாகச் செல்லவில்லை. அது ஆயுர்வேதமா அலோபதியா என்று போனது. நீங்கள் அந்த பிரச்சினையைத் தொட்டீர்கள் epistemology தேவை என்றுசொல்லிவிட்டு பேச்சை கடத்திக்கொண்டு சென்றீர்கள். இலக்கியத்திற்கு epistemology தேவையில்லை என்பது அதை mystify செய்வதுதான். நம்மவர்கள் இலக்கியத்தை demystify செய்துகொண்டிருக்கிறார்கள். கூடவே அறிவியலையும் மருத்துவத்தையும் விவசாயத்தையும் mystify செய்கிறார்கள் என தோன்றியது. இந்த விழாவில் சிறப்பாக இருந்ததே என்னைப்போன்றவர்களைச் சந்திக்கமுடிந்ததுதான். நன்றி
ஜெயக்குமார்